FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த வெற்றியை முன்னிட்டு, இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹாக்கி இந்தியா தனது எக்ஸ் (X) தள பதிவில், பெருமை, நன்றியுணர்வு, அங்கீகாரம். FIH மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கப் 2025-26 சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.3 லட்சமும், ஆதரவு குழு உறுப்பினர்களுக்கு ரூ.1.5 லட்சமும் பரிசாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக நேஷன்ஸ் கப் பட்டத்தை வென்றதுடன், அடுத்த சீசனுக்கான FIH மகளிர் புரோ லீக் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக நவ்நீத் கவுர் 4வது நிமிடத்திலும், சுனேலிதா டோப்போ 15வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மேலும், இந்திய அணியின் தற்காப்பு வீராங்கனைகளும், கோல் கீப்பர் சவிதாவும் சிறப்பாக செயல்பட்டு, நியூசிலாந்து அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்தனர்.

இறுதிப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக லால்ரெம்சியாமி தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், இந்திய வீராங்கனை தீபிகா, தொடரில் 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த வீராங்கனைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இந்திய அணி முழுத் தொடரிலும் தோல்வியின்றி விளையாடியது. குழுநிலைப் போட்டிகளில் அமெரிக்கா, ஜப்பான், உருகுவே அணிகளை வீழ்த்திய இந்தியா, அரையிறுதியில் சிலியை 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக தோற்கடித்தது. தொடர்ந்து இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version