அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முன்பு, சிலரை குறிப்பிட்டு விமர்சித்து வைக்கப்பட்ட பேனரால் உட்கட்சி பூசல் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிருப்தி குழுவினர் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகிறது. அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக ஒரு குடும்பத்தின் கைக்குள் செல்வதாகவும், கட்சியில் கேள்வி கேட்கும் சூழல் இல்லை என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்ஜிஆர் மாளிகை’ முன்பு வைக்கப்பட்ட பேனர் ஒன்று கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் ஒரு குள்ளநரி செய்தியாளரை சந்திப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதில், “குடிகார குள்ளநரி அன்று கும்பலாக ஊளையிட்டது, இன்று அனாதையாக வந்து ஓலமிடுகிறது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், “எத்தனை குடிகார குள்ளநரிகள் ஊளையிட்டாலும், சிங்கத் தமிழர் எடப்பாடி பழனிசாமியின் முன் குள்ளநரிகளின் ஊளை எடுபடாது” என்றும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அதிமுகவின் உட்கட்சி பூசல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது. ஏற்கனவே கட்சியின் தலைமை மற்றும் கொள்கை முடிவுகள் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தலைமை அலுவலகத்திற்கு முன்பே இத்தகைய பேனர் வைக்கப்பட்டது கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

