அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா மலைப்பகுதியில் தனியாக மலையேற்றத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பயின்று வந்த விக்ரம் முபாயி (Vikram Mubayi) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்யோ தேசிய வனப்பகுதியில் (Inyo National Forest) உள்ள பிக் பைன் லேக்ஸ் (Big Pine Lakes) பகுதிக்கு விக்ரம் தனியாக மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் அவர் கடைசியாகத் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன்பிறகு அவரைக் காணவில்லை.
இதனையடுத்து, இன்யோ கவுண்டி மீட்புக் குழுவினர் மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும், விக்ரம் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இதில் எவ்வித சந்தேகத்திற்குரிய செயல்களும் நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலும், அதிகாரிகளால் பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.
சிறுவயது முதலே விளையாட்டு மற்றும் இயற்கையின் மீது அதீத ஆர்வம் கொண்ட விக்ரம், புவி வெப்பமடைவதைத் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவதைத் தனது எதிர்கால லட்சியமாகக் கொண்டிருந்தார். ஒரு சிறந்த மாணவராக மட்டுமின்றி, புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டும் நோக்கில் சுமார் 4,500 மைல்கள் நெடிய சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
