தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள் தனியார் ஹோட்டல்களுக்கு தவறாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு, உள்ளூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அம்மா உணவகத்திற்கு வந்த பொதுமக்கள் இட்லி கிடைக்காமல் ஏமாற்றமடைந்த நிலையில், இட்லிகள் தனியார் உணவகங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அங்கு ஒரு ரூபாய் விலையில் வாங்கப்பட்ட இட்லி பத்து ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனால் உண்மையான பயனாளிகளான ஏழை, நடுத்தர மக்கள் உணவு உரிமையை இழக்கும் சூழல் உருவானது. இன்று காலை எந்த முன்னறிவிப்பும் இன்றி அம்மா உணவகத்திற்கு வந்த ரவிச்சந்திரன், முதலில் அதிகாரிகளுக்கு தெரியாமல் செயல்பாடுகளை நேரில் கண்காணித்தார். பின்னர் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து விரிவான ஆய்வை மேற்கொண்டார். இட்லி டோக்கன் வழங்கும் கவுண்டர், இட்லி தயாரிப்பு பகுதி, விநியோக மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் அவர் சோதனை செய்தார்.
ஆய்வின்போது, “பார்சல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அம்மா உணவகத்தில் வந்து அமர்ந்து மட்டுமே உணவருந்த வேண்டும்” என்று ஊழியர்களுக்கு தெளிவான உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று பார்சல் எடுக்க வந்தவர்களுக்கு இட்லி மறுக்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் உள்ளே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக உணவகம் திறந்த சில நிமிடங்களிலேயே இட்லி தீர்ந்துவிடும் நிலை மாறி, இன்று பலர் மகிழ்ச்சியுடன் அமர்ந்து சாப்பிட்டுச் சென்றனர்.
நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் இதுகுறித்து கூறுகையில், “உணவு பொருட்கள் தவறாக விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு இருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்தச் சம்பவம் அம்மா உணவகங்களின் நோக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஏழை மக்களுக்கான மலிவு உணவுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கோவில்பட்டி பகுதி மக்கள் இந்த ஆய்வை வரவேற்றுள்ளனர்.
