தமிழக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தில் தங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை எனக் கூறி, ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வயலில் அமர்ந்து தியானம் செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கை. தகுதியுள்ள எந்த விவசாயியும் இத்திட்டத்தில் இருந்து விடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்க இந்த அதிரடி முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
எங்கள் துயரத்தை அரசிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால், எங்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை இறைவனுக்காவது தெரியப்படுத்த வேண்டும்” எனக் கூறி, விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயிரிட்டுள்ள நிலத்திலேயே அமர்ந்து மனமுருகி தியானத்தில் ஈடுபட்டனர்.
இயற்கை சீற்றங்கள், அதிகரித்த உற்பத்திச் செலவு மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத தற்போதைய சூழலில், கடன் தள்ளுபடி மட்டுமே தங்களைக் காக்கும் ஒரே வழி என அவர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். வயலில் விவசாயிகள் வரிசையாக அமர்ந்து தியானம் செய்த இந்த வித்தியாசமான காட்சி, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. விவசாயிகளின் இக்கோரிக்கையை ஏற்று அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
