ஓமன் கடற்கரை அருகே வணிக சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்த 11 இந்திய கடலோடிகளில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மாயமாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமன் கடற்கரை அருகே வணிகக் கப்பலான GFS Galaxy மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஓமானின் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து மாயமான இந்தியரைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த இந்தியர் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ள இந்திய அரசு, நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
