மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் முழு அளவிலான போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வணிகக் கப்பல் மீதான ஈரானின் தாக்குதலை அடுத்து தொடங்கிய இந்த சங்கிலித் தாக்குதல்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை உள்ளடக்கிய போர்க்களமாக மாறியுள்ளன.
அமெரிக்க ராணுவத்தின் தகவலின்படி, ஈரான் ஆதரவு படைகள் ஒரு வணிகக் கப்பலைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்கியது. பதிலுக்கு ஈரான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்களை ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் குறிவைத்தது. பஹ்ரைனில் அமெரிக்க விமானப்படைத் தளம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தரப்பில் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக அமெரிக்கப் போர் விமானங்கள் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஈரானிய ராணுவ இலக்குகளை தீவிரமாகத் தாக்கின. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் சேமிப்புக் கிடங்குகள், கடலோர ரேடார் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது குண்டுமழை பொழிந்தது. இந்தப் பகுதி உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது என்பதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் நிரந்தர போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இருந்து ஈரான் நிரந்தரமாக வெளியேறக்கூடும் என எச்சரித்துள்ளது. அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் பேச்சுவார்த்தை முறிந்துவிடும் என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கடும் மிரட்டல் விடுத்துள்ளார். “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறுவதன் மூலம் ஈரான் எப்போதும் பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது கசப்பான உண்மை. நியாயமான முறையில் நடந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டால், முழுமையான போரைத் தொடங்க அமெரிக்கா கட்டாயப்படுத்தப்படும். அப்படி நடந்தால், ‘இஸ்லாமியக் குடியரசான ஈரான்’ என்றொரு நாடு இந்த உலகில் இனி இருக்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாகக் கூடி நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழைப்புகள் எழுந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழல் இரு தரப்பினரும் பின்வாங்காத பட்சத்தில் பிராந்தியப் போர் உலகளாவிய நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது.
