இந்தியாவின் அழைப்பு ஏற்று ஈரானின் மற்றொரு போர்க்கப்பல் இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழைப்பு ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த மிலன் 2026 சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பல் ஐரிஸ் டெனா வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச் 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்டிருந்த போது இந்திய பெருங்கடலில் அமெரிக்காவை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தாக்கி ஐரிஸ் டெனாவை மூழ்கடித்தது. இந்த தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர்.

 இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே மற்றொரு ஈரான் போர்க்கப்பல் இந்தியா வந்துள்ளது.

 ஐரிஸ் லாவண் என்ற பெயர்க் கொண்ட அக்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்பதற்காக வந்துவிட்டு ஈரான் திரும்பும் போது கப்பலில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை சரி செய்வதற்காக கொச்சித் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதிக்கக் கோரி ஈரான் அதிகாரிகள் விண்ணப்பித்தனர். இதற்கு இந்திய அதிகாரிகள் மறுநாளே அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

 இப்படிப்பட்ட பதற்றமான ஒரு சூழலில் ஈரானின் மற்றொரு போர்க் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் தந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் உள்ள 183 பேரும் கொச்சியில் தங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version