CJP-யின் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் தோல்வியையே குறிப்பதாகவும், அதற்கு மத்திய உள்துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சாம்பாஜி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் திப்கே, மத்திய அரசு மற்றும் பாஜக மீது பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தங்கள் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானால், அது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள மிகப்பெரிய ஓட்டை என்றார். இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். புதிய கல்வி அமைச்சரை விமர்சித்த அபிஜித், பழைய அமைச்சருக்குப் பதிலாக புதியவர் நியமிக்கப்பட்டுள்ளது வெறும் நகல் மட்டுமே என்று தெரிவித்தார். உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் மாணவர்களை மிரட்டுவது வெட்கக்கேடானது என்றார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் உரிமைக்காக நாடு தழுவிய அளவில் சிஜேபி கட்சி போராட்டங்களை முன்னெடுத்தது. இந்தப் போராட்டங்களுக்கு சில வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவு இருப்பதாக ஆளும் தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தாங்கள் எவ்வித பண நன்கொடைகளையும் பெறுவதில்லை என்றும், தன்னார்வலர்களின் உதவியுடன் மட்டுமே போராட்டங்களை நடத்துவதாகவும் சிஜேபி தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.’
