கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்றும், அவருக்குப் பதிலாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் புதிய முதலமைச்சராக  பொறுப்பை ஏற்கலாம் என்றும் வெளியாகும் தகவல்களால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தலைமை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு, காங்கிரஸ் மேலிடத்துடன் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் நிலவும் தலைமை மோதலுக்குத் தீர்வு காண, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர். மே 26, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருடன் சுமார் 7 மணி நேரம் நீடித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன.

இதையடுத்து காங்கிரஸ் மேலிடம், சித்தராமையாவை கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, மாநிலங்களவை உறுப்பினர் மூலம் தேசிய அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் முக்கிய ஓபிசி (OBC) முகமாக அவரை டெல்லியில் பெரிய பொறுப்பில் அமர்த்த மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2023 சட்டமன்றத் தேர்தலின் போதே முதலமைச்சர் பதவி தொடர்பாக ஒரு புரிதல் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக்க காங்கிரஸ் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனைகள் மாநிலங்களவை மற்றும் கர்நாடக மேலவைத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யவே நடத்தப்பட்டதாகவும், தலைமை மாற்றம் குறித்த தகவல்கள் வெறும் ஊகங்களே என்றும் கே.சி. வேணுகோபால் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சித்தராமையா டெல்லி ஆலோசனைகளுக்குப் பிறகு பெங்களூரு திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து வியாழக்கிழமை (மே 28) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version