சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில் பெரிய அளவில் உள்கட்சிப் பூசல் வெடித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும், தோல்வி குறித்து விவாதிக்கப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.

அதிமுகவில் பிளவு ஏற்பட்ட அதே வேளையில், தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றமாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் வேலுமணி தரப்பிற்கு இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தவெக அமைச்சரவையில் அதிமுகவினருக்கு இடம் கிடைக்காத சூழ்நிலை உருவானது. இதனிடையே, அதிருப்தியில் இருந்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது நீக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேலுமணி தரப்பில் இருந்து ரகசிய சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே தற்போது சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  இரு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்கும் வகையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை விரிவாக ஆராய இரு அணிகளையும் உள்ளடக்கிய ஒரு தனி குழுவை அமைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று அல்லது நாளை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடைந்து போன அதிமுக மீண்டும் ஒன்று சேரவுள்ள இந்த நகர்வு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version