ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சீமான், ” வேட்பாளர்கள் நேர்காணல் என்பது கட்சிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்?? என்ற அடிப்படையில் அல்ல. எல்லா தலைவர்களும் ஆளவேண்டும் என்று இருப்பார்கள். நாம் மட்டும் தான், அனைவரும் வாழ வேண்டும் என்று நினைகிறோம்.
ரத்தம் சிந்தாத போர் அரசியல். என் தலைவனுக்கு (வி.பு. தலைவர் பிரபாகரன்) முருகன் மீது நம்பிக்கை இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு முருகன் மீது நம்பிக்கை வந்தது. பிரபாகரனிடம் இருந்து வந்த சீமான் என்னும் தோட்டா இப்போது 234 தொகுதிகளிலும் தோட்டாக்களை இறக்கியுள்ளேன். பெண்களுக்கு அதிக இடம் கொடுப்பது பெருமையில்லை, அது கடமை” என்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“ ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்க செயல் என்றார். திருச்சியில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக மாநாட்டிற்கான திட்டம் சிறப்பாக உள்ளதாகவும் , ஆனால் நிதி தான் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு , நான் அந்த பேச்சைக் கேட்கவில்லை எனவும் மற்றவர்கள் அவருடைய பேச்சு சிறப்பாக இருந்ததாக கூறியதாக தெரிவித்தார் . தமிழர் குறித்தும் தமிழ் குறித்தும் எங்கள் மண்ணைச் சேர்ந்த கமல் பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம் பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் ஏற்கனவே விஜயிடம் தெரிவித்தி இருந்ததாகவும் கூறிய அவர், தமிழக வெற்றி கழகத்தினர் விருப்ப மனு குறித்த கேள்விக்கு அறியாத பிள்ளைகள் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள் “ எனவும் தெரிவித்தார்.
