தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் அதில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் கட்சித் தலைமை வானதி சீனிவாசனுக்கே மீண்டும் அங்கு வாய்ப்பளிக்க முடிவு செய்ததாலும் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அண்ணாமலை சமீபத்திய கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரதமரின் கோவை வருகையைப் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுமாறு தலைமை வலியுறுத்தியும், தான் கேட்ட தொகுதி கிடைக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
இந்தநிலையில், இன்று வெளியாகியுள்ள பட்டியலில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவிநாசி தொகுதியிலும் களம் காண்கின்றனர். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், கட்சித் தலைமையின் முடிவை ஏற்று அவர் தனது தேர்தல் பணியைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நிலவி வந்த வேட்பாளர் தேர்வு தொடர்பான சலசலப்புகளுக்கு இந்தப் பட்டியல் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜகவைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத் தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரமாண்டமாகவும் ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. நாடு இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.
ஒரு கட்சித் தொண்டனாக, வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
