தவெகவில் இணைந்தது எந்தவித நிர்பந்தத்தாலும் அல்ல, தனது சுய விருப்பத்தின் அடிப்படையில்தான் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தவெக தரப்பில் தன்னை அணுகியதாகவும், கூறி இருக்கிறார். குதிரைபேர ஊழலுக்கு இதுவே தகுந்த ஆதாரங்கள் என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று ஆளுநரைச் சந்தித்து, இது தொடர்பாக புகார் அளித்தார்.
இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தவெகவில் சேருமாறு அக்கட்சியிலிருந்தோ, ஏற்கனவே அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் அல்லது முன்னாள் எம்எல்ஏக்களிடமிருந்தோ யாரும் என்னை அழைக்கவில்லை” என்றார்.
அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்ததாகவும், அதனால்தான் ஒன்றிய, நகர மற்றும் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் தன்னுடன் வந்து தவெகவில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.
தனது பேட்டியின் கருத்து தவறாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், “நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு, பல கட்ட யோசனைக்குப் பிறகு, எந்தவித அழுத்தமும் இல்லாமல் நான் எடுத்த சுயமான முடிவுதான் தவெகவில் இணைந்தது. தவெகவோ அல்லது தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்களோ என்னை நிர்பந்தப்படுத்தவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
