இந்தியாவில் 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாதம், கடந்த 100 ஆண்டுகளில் மிக வறண்ட மூன்றாவது ஜூன் மாதமாகப் பதிவாகியுள்ளது. நீண்ட கால சராசரியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வெறும் 60 சதவீத மழைப்பொழிவை மட்டுமே பெற்றுள்ளது; இது 2025-ஆம் ஆண்டின் 109 சதவீத மழைப்பொழிவோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். சராசரியாக ஜூனில், 157.7 மி.மீ மழை பதிவாகும். ஆனால், 2026 ஜூனில் வெறும் 92.2 மி.மீ மழை பதிவாகி, 42% பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
உதாரணமாக 2021-ல் 110 சதவீதம், 2022-ல் 92 சதவீதம், 2023-ல் 91 சதவீதம் மற்றும் 2024-ல் 89 சதவீதம் மழை பதிவாகியிருந்தது. 2026-ல் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு, முந்தைய ஆண்டுகளின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், பருவமழையின் பலவீனமான தொடக்க நிலையைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.
பருவமழையின் முன்னேற்றம் இந்த ஆண்டு நாடு முழுவதும் சீராக இல்லை. குறிப்பாக, ஜூன் 30-ஆம் தேதி வரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் பருவமழை முழுமையாக முன்னேறவில்லை. இதனால் இப்பகுதிகள் இன்னும் போதிய மழையின்றி வறண்ட சூழலையே சந்தித்து வருகின்றன.
இந்த மழைப்பற்றாக்குறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பல காரணங்களைக் குறிப்பிடுகிறது. முக்கியமாக, எல் நினோ (El Nino) போன்ற காலநிலை மாற்றங்கள் பருவமழைக் காற்றின் வலுவைக் குறைத்துள்ளன. மேலும், மழைக்குத் தேவையான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வலுவாக உருவாகாததும், அதன் பரவல் ஒழுங்கற்றதாக இருந்ததும் இந்தச் சிக்கலுக்குக் காரணமாக அமைந்தன.
ஜூன் மாதத்தில் நிலவிய இந்த பலவீனமான சூழல், ஒட்டுமொத்த பருவமழையும் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தொடக்கநிலை பற்றாக்குறை விவசாயம் மற்றும் நாட்டின் நீர் மேலாண்மை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வரும் மாதங்களில் மழையின் நிலை குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கவலை எழுந்துள்ளது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே இந்த வறட்சியிலிருந்து மீள முடியும் எனவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
