தருமபுரி மாவட்டத்தில் கடன் பிரச்சினையால் மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, பின்னர் லாரி மீது இருசக்கர வாகனத்தை மோதச் செய்து உயிரிழந்த தொழிலதிபரின் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (45). டிரேடிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு சரண்யா (35) என்ற மனைவியும், சாத்தியா (14) என்ற மகளும் இருந்தனர். சொந்த ஊரான அன்னசாகரத்தில் இருந்து தருமபுரி கோட்டை கோயில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் அதிகரித்த கடன் சுமையால் சந்தோஷ் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த தனது மனைவி சரண்யாவை கழுத்தறுத்து கொலை செய்ததாகவும், பின்னர் தனது மகள் சாத்தியாவை எடைக்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார் சந்தோஷ்.

அதன்பிறகு இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷ், தருமபுரி – கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புறவடை அருகே லாரி மீது தனது இருசக்கர வாகனத்தை மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையிலான போலீசார், வீட்டில் உயிரிழந்திருந்த சரண்யா மற்றும் சாத்தியாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், விபத்தில் உயிரிழந்த சந்தோஷின் உடலையும் அதியமான் கோட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

உயிரிழப்பதற்கு முன்பு சந்தோஷ் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவில், “என் மனைவியையும், மகளையும் நான்தான் கொன்றேன். தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் தீர்க்க முடியாத கடன் சுமையால் இந்த முடிவை எடுத்தேன். என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள். என் குடும்பத்தினருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காதீர்கள். இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் கடன் பிரச்சினை மட்டுமே காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version