கமல் படங்கள் வெளியீடும் சர்ச்சைகளும் கூடவே பிறந்தவை. ஏதாவது பிரச்னை, வம்பு, வழக்கு இல்லாமல் அவர் படத்தை வெளியிடவே மாட்டார். வசூல்ராஜாவில் ஆரம்பித்த இந்த வழக்கம், தக் லைஃப் வரை தொடர்கிறது. தக் லைஃப் படத்தில் என்னப்பா சர்ச்சை என்கிறீர்களா? அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் வந்ததும், அப்போது கமல் சொன்னதும்தான் அவருக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.
சம்பவம் என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியர் கல்லூரியில் நடந்தது. அவ்விழாவில் தமிழ் மட்டுமன்றி பல்வேறு மொழிகளைச் சார்ந்த திரைத்துறையினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “உயிரே, உறவே தமிழே” என்று சொல்லித் தமது உரையைத் தொடங்கினார். சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுக்கொண்டே வந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமாரைப் பற்றிப் பேசும்போது “தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது. இதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்” என்று பேசினார். இந்தக் கருத்து கன்னடர்களைக் கொந்தளிக்க வைத்தது.
சர்ச்சை என்ன?
கமலின் கருத்துக்குக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா “கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார்” என்று கண்டனம் தெரிவித்தார். “கமல் பேசியது ஆதிக்க மனப்பான்மையின் உச்சகட்டம்” என்று இன்னொரு அரசியல் தலைவர் கருத்து தெரிவித்தார். பாஜக பிரமுகர் ஒருவர் கமலைத் தரக்குறைவாகவும் விமர்சித்தார். “கமல் மன்னிப்புக் கேட்கும் வரை அவரது திரைப்படங்களைக் கர்நாடகாவில் புறக்கணிக்க வேண்டும்” என்றும் கருத்துகள் வலுத்து வருகின்றன. தாம் சொன்ன கருத்து ‘அன்பின் வெளிப்பாடு’ காரணமாகச் சொல்லப்பட்டது என்று கமல் உடனேயே பதில் சொல்லிவிட்டார். ஆனாலும் அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
சரித்திரம் என்ன?
பொதுவாகவே எதன் வரலாற்றையும் தொல்லியல், இலக்கியச் சான்றுகளின் மூலமே நாம் அறிகிறோம். இந்திய தொல்லியல் துறையின் ஆய்வின்படி மதுரையில் கிடைத்த தமிழின் முதல் கல்வெட்டு, கி.மு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிய வருகிறது. ஆந்திரா அருகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பிராமி எழுத்துகளும் தமிழ்தான் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கன்னடத்தின் பழமையான கல்வெட்டு, 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஹல்மிடி கல்வெட்டு ஆய்வின்போது இந்திய தொல்லியல் துறை தெரிவித்தது. கண்கூடாக இருக்கும் தொல்லியல் சான்றே கன்னடத்தை விட தமிழ் குறைந்தது ஒரு நூற்றாண்டாவது மூத்த மொழி என்பது தெரிய வருகிறது.
இலக்கியச் சான்றின்படி நமது தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்துள்ள மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் பாடல் தொடங்கி, பல இலக்கியங்கள் திராவிட மொழிகளுக்குத் தமிழ் தாயாக விளங்கியுள்ளமையை அறிவிக்கின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்தின் மறைக்கப்பட்ட பகுதியில் உள்ள
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்”
என்ற வரி கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் மொழியிலிருந்து உதித்து, ஒன்றே பலவாக இருக்கின்றன என்ற பொருளைத் தருகிறது.
நமக்கெல்லாம் தெரிந்த, மிகப் புகழ் பெற்ற பாடல்
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி!
என்பதில், மலைகளும் நிலமும் தோன்றி, அவை பண்படுவதற்கு முன்பிருந்தே ஆயுதங்களுடன் தமிழ்க் குடி வாழ்ந்து வந்தது என்ற பாட்டும் தகுதியான எடுத்துக்காட்டு ஆகும். இதைத் தமிழின் புறப் பொருளுக்கு இலக்கணம் கூறும் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது. பிற்காலத்தில் எழுந்த ‘தமிழரசிக் குறவஞ்சி’ என்கிற நூலும்
“வேற்று வண்ணப் பிறமொழி கற்க உதவிய
வன்மை பொருந்து மொழி”
என்று தமிழைக் குறிக்கிறது. அதாவது வேற்று மொழிகள் தமிழிலிருந்து கற்றுக் கொண்டன என்று பொருள் தருகிறது. இப்படித் தமிழ் மொழியின் தொன்மையை அறிந்தவர்கள் அதைப் புகழ்ந்து வந்த வேளையில், ஆய்வு நோக்கோடு ஒப்பீடுகளும் நடந்தன.
1816-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் பிரதிநிதியாக இருந்த எல்லீஸ் என்பவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வேறுபட்டது என்றும், அவை ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றில் ஐரோப்பிய சிந்தனை இல்லாத தன்மையையும் சுட்டிக்காட்டினார். அவரைத் தொடர்ந்து இதே சிந்தனையை மிக விரிவாக ஆராய்ந்த மொழியியல் அறிஞர் கால்டுவெல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்கிற தமது நூலை 1856-ம் ஆண்டு வெளியிட்டார்.
தமது நூலில் ஒவ்வொரு மொழியில் புழக்கத்தில் உள்ள சொற்களையும் எடுத்து அவற்றின் வேர்ச் சொற்களை ஆராய்ந்தார். அதன் முடிவில் அவற்றையெல்லாம் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டார். அவற்றுக்கு அதிகமான வேர்ச் சொற்களை வழங்கியிருப்பது தமிழ்தான் என்றும் நிறுவினார். ‘திராவிடம்’ என்கிற சொல் அதற்கு முன்பே புழக்கத்தில் இருந்தாலும் அதற்குச் சரியான பொருளைக் கால்டுவெல் வழங்கினார்.
சரி எது?
தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் செழித்து வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளும் வளர்ந்தன. தமிழில் பயன்படுத்தப்படும் சொற்கள், வாக்கிய அமைப்புகள், பேசும் முறை அனைத்தும் மேற்சொன்ன மொழிகளிலும் உள்ளன. அதனால் அவற்றின் வேர்ச்சொல் தமிழிலிருந்துதான் பிறந்திருக்கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலமும் நாட்டின் இறையாண்மையை ஒற்றுமையோடு காத்து வரும் வேளையில், எதிலிருந்து எது பிறந்தது என்ற கருத்தும் வாதமும் வீண் சண்டையை மட்டுமே ஏற்படுத்தும். நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து மேலே குறிப்பிட்ட அவ்வரிகள் நீக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். மக்கள் தலைவர்கள் இதை அறிந்து செயல்படுவது நன்று.