தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 18ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “பேரவையைப் பூட்டினாலும் முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம்” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் பேச்சு தொடர்பாக தவெகவினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்தனர். இந்நடவடிக்கைக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி இன்று சந்தித்தார். எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கருணாநிதி, அப்துல் வகாப் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சிறையில் இருக்கும் மார்க்கண்டேயன் நலமாக உள்ளார். தவெக அரசு விமர்சிப்பவர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரையும் கைது செய்ய முயற்சி நடந்தது” என்றார்.

மேலும், “தவெக அரசு யூடியூபர்கள் உள்ளிட்ட தன்னை விமர்சிப்பவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப முயல்கிறது. ஜனநாயகத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாத இந்த அரசு, காவல்துறையை எதிர்க்கட்சியினரை அடக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை” என்று குற்றம் சாட்டினார்.

“ஸ்டாலின் ஆட்சியில் விஜய் எவ்வளவு கடுமையாக விமர்சித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது திமுக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் விஜய்க்கு இல்லை. பயத்தின் காரணமாகவே அவர் அரசியல் செய்கிறார். மோடி பாணியில் ஆட்சி நடத்துகிறார். பாஜக என்ற பெயரைக்கூட சொல்ல அஞ்சுகிறார்கள். எதிர்ப்புக் குரல்களை அடக்கும் விதத்தில் தான் போராட்டக்காரர்களையும் கையாளுகிறார்கள்” என்று கனிமொழி தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் நலன் வந்தால் திமுக எப்போதும் விட்டுக்கொடுக்காது. எந்த காலத்திலும் திமுகவும், அதிமுகவும் நெருங்கி வந்தது கிடையாது” என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தவெக அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version