டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் Cockroach Janata Party (CJP) போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழகத்திலும் அக்கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் நடவடிக்கையை கண்டித்து, தமிழக சிஜேபி நிர்வாகிகள் சென்னையில் நேற்று முதல் போராட்டத்தைத் தொடங்கினர்.

முதலில் சைதாப்பேட்டை பனகல் பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்தை போலீசார் கலைத்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டம் மாநிலத்தில் தீவிரமடையும் சூழல் நிலவுவதால், தமிழக உளவுத்துறையினர் மாநிலம் முழுவதும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, இது தொடர்பான அறிக்கைகளை மேலிடத்துகு அனுப்பி வருகின்றனர்.

சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான இந்தத் தேர்வு முறையை ரத்து செய்வதோடு, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும், நீட் காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கேற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.  அமைதியாக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்தப் போராட்டம் தொடரும்என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

டெல்லியில் சிஜேபி தலைமையகம் எடுக்கும் முடிவுகளையே தமிழகத்திலும் பின்பற்ற உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் போராட்டம் முடியும் வரை தமிழகத்திலும் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version