ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் நாள் நாடு முழுவதும் ‘கார்கில் விஜய் திவஸ்’ (Kargil Vijay Diwas) தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு இதே நாளில்தான் கார்கில் போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்தப் போரில், இந்திய எல்லைக்குள் ஊடுருவி ரகசியமாக கைப்பற்றப்பட்ட பல உயரமான மலைச் சிகரங்களை இந்திய ராணுவம் மிகத் துணிச்சலாக மீட்டு வரலாறு படைத்தது. 27 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், நாட்டிற்காக இரத்தம் சிந்திய இராணுவ வீரர்களின் புகழ் இன்றும் உச்சத்தில் இருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின்னணியும், மீட்கப்பட்ட முக்கியச் சிகரங்கள் குறித்த விவரங்களையும் தெரிந்துகொள்வோம்.
கார்கில் போர் ஏன் வெடித்தது?
ஒருகாலத்தில் நட்பு நாடுகளாக இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று எதிரெதிர் துருவங்களில் நிற்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு இரு நாடுகளும் காஷ்மீரை தங்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டன. பாகிஸ்தான் பழங்குடியின இஸ்லாமியர்களின் உதவியோடு சில பகுதிகளைப் கைப்பற்றின. இதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவே, பாகிஸ்தான் போர்த் தொடுக்கத் தொடங்கியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1947 அக்டோபர் மாதத்தில் முதல் போர் நடைபெற்றது. இதனைத் தடுக்கும் விதமாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டு சமாதான முயற்சிகளை மேற்கொண்டது.
1965 இல் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நுழைய முயற்சித்தது. இதற்கு தக்க பதிலடி கொடுத்தது இந்தியா. கிட்டத்தட்ட 17 நாட்கள் நடந்த இப்போரில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. அடுத்ததாக 1971 இல் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போர் மூண்டது. இந்தப் போரின் முடிவில் தான் வங்காளதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது.
இந்தியா பாகிஸ்தான் போரில் மிகவும் முக்கியமானது கார்கில் போர். கடந்த 1999 இல் பாகிஸ்தான் இராணுவம் கார்கில் மலைப்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்தது.
கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் படையினரும் ஊடுருவக்காரர்களும் இந்தியப் பகுதிக்குள் ரகசியமாக நுழைந்தனர். அவர்கள் கார்கில் பகுதியில் பல உயரமான சிகரங்களைக் கைப்பற்றினர்; அங்கிருந்து ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையைக் கண்காணிக்கவும் முற்பட்டனர். இந்தத் தகவலை அறிந்த இந்திய ராணுவம், அந்த நிலைகளை மீண்டும் மீட்க ‘ஆபரேஷன் விஜய்’ (Operation Vijay) என்ற பெயரில் மாபெரும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த இடம் போர் செய்வதற்கு உகந்தது அல்ல. ஏனெனில் 16,000 அடி உயரத்தில் மலைமீது போர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய இராணுவம் இருந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி முன்னேறிச் சென்றனர் இந்திய இராணுவ வீரர்கள். பல இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை நாட்டிற்காக அர்ப்பணித்தனர்.
எங்கு பார்த்தாலும் துப்பாக்கிச் சூடு சத்தம் தான். குண்டுகள் வீரர்களின் உடலைத் துளைத்தன. 2 மாதங்கள் நடைபெற்ற கார்கில் போரில், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. இந்தப் போரில் இந்திய வீரர்கள் சுமார் 500 பேரும், பாகிஸ்தான் வீரர்கள் 4,000 பேரும் உயிரிழந்தனர்.
இறுதியாக இந்திய வீரர்கள் கார்கில் பகுதியை ஜூலை 26 இல் கைப்பற்றி, மலை உச்சியில் இந்திய தேசியக் கொடியை நட்டனர். இந்த நாளைத் தான் ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாக கொண்டாடுகிறோம்.
கார்கில் போர்க்களத்தில் மிகவும் வியூகம் சார்ந்த மிக முக்கியமான சிகரங்களில் ஒன்று டைகர் ஹில் (Tiger Hill) ஆகும். எதிரிகள் உயரத்தில் நிலை கொண்டிருந்ததால் இதைக் கைப்பற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. பல நாட்கள் நீடித்த கடுமையான சண்டைக்குப் பிறகு, இந்திய வீரர்கள் டைகர் ஹில்லில் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றிச் சாதனை படைத்தனர். இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகப்பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
இந்திய ராணுவம் எதிரிகளிடமிருந்து மீட்ட முதல் முக்கியமான சிகரங்களில் டோலிங் ஒன்றாகும். இந்த வெற்றி ராணுவத்தின் தன்னம்பிக்கையை மேலும் பன்மடங்கு உயர்த்தியதுடன், மீதமுள்ள சிகரங்களை நோக்கிய அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும் உதவியது.
இவற்றுடன் பாயிண்ட் 5140 (Point 5140) மற்றும் பாயிண்ட் 4875 (Point 4875) ஆகிய சிகரங்களையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டுத் தடையை அகற்றியது. பாயிண்ட் 4875 சிகரத்தைக் கைப்பற்றும் போரில் கேப்டன் விக்ரம் பத்ரா அசாத்தியமான வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தினார். “யே தில் மாங்கே மோர்” (Yeh Dil Maange More) என்ற அவரது புகழ்பெற்ற வரிகள் இன்றும் அனைவராலும் நினைவுகூரப்படுகின்றன. நாட்டுக்காக அவர் காட்டிய வீரத்திற்காகவும் தியாகத்திற்காகவும் இந்தியாவின் உயரிய விருதான ‘பரம் வீர் சக்கரம்’ வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
கார்கில் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நீடித்த இந்தப் போரில், இந்திய ராணுவம் ஒவ்வொரு இடமாக மீட்டு அனைத்து முக்கிய சிகரங்களையும் தன்வசப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 1999 ஜூலை 26 அன்று இந்தியா கார்கில் போரில் முழுமையான வெற்றியைப் பெற்றது. அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் நாள் கார்கில் விஜய் திவஸ் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் இந்தப் புனித நாள், இந்திய ராணுவத்தின் அளப்பரிய வீரத்தையும், தைரியத்தையும், தியாகத்தையும் நமக்கு எப்போது நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
