கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று பரவல் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 2025-26ஆம் ஆண்டின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த வயதினரில் 7,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் ஏற்பட்ட புதிய பரவல் அல்ல; பல்வேறு காலகட்டங்களில் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளாகும்.

மாநில சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், தொழில்நுட்ப வளர்ச்சி, மாறிய வாழ்க்கை முறை மற்றும் போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை இந்த வயதினரிடையே தொற்று அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகின்றன. கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே பாதுகாப்பு குறித்த அறிவு குறைவாக இருப்பது, சில விடுதிகளில் தொற்று வேகமாகப் பரவ வழிவகுத்துள்ளது. ஆண்-ஆண் உடலுறவு, பெண்-பெண் உறவுகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெங்களூர் போன்ற நகரங்களில் டேட்டிங் செயலிகள் மூலம் அநாமதேய தொடர்புகள் அதிகரிப்பதும், போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதால் தொற்று தொடர்புகளைக் கண்டறிவது சவாலாக மாறுவதும் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு, “எனக்கு வராது” என்ற தவறான நம்பிக்கை, பிற பால்வினை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு குறைவு, கண்டம் பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தாதது ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

ஒரே நேரத்தில் பல துணையுடன் உறவு வைப்பது, பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வது போன்ற பழக்கங்கள் வைரஸை வெவ்வேறு குழுக்களுக்கு இடையே சங்கிலித் தொடர்போல் பரப்புகின்றன. மேலும், பரிசோதனை செய்யத் தாமதிப்பதால் பலர் தங்கள் நிலையை அறியாமலே மற்றவர்களுக்கு தொற்றைப் பரப்பும் அபாயம் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 54,000க்கும் மேற்பட்டோர் தங்கள் எச்.ஐ.வி. தொற்றை அறியாமலே வாழ்கின்றனர்.

சமீபத்தில் “7,000 கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதி, கட்டாயப் பரிசோதனை” என்ற செய்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்புச் சங்கத்தின் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா, இது ஒரே நாளில் ஏற்பட்ட பரவல் அல்ல என்றும், கல்லூரிகளில் பரிசோதனை முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

விழிப்புணர்வு முகாம்கள், ஆலோசனை மற்றும் தொடர் சிகிச்சை மூலம் இளைஞர்களைப் பாதுகாக்க மாநிலம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்கள் பாதுகாப்பான உடலுறவு, வழக்கமான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை முன்னெடுத்தால் மட்டுமே இந்தச் சுகாதார சவாலை எதிர்கொள்ள முடியும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version