தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி  வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் பொன்னி அரிசி வகைகளை விரும்பி வாங்குகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக அரிசி விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் விலை உயர்ந்த நிலையில், தற்போது 15 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.80 க்கு விற்கப்படுகிறது.

25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் இட்லி அரிசியும் கிலோ 35 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது தான் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு அரிசி லோடு வருவது வெகுவாக குறைந்து விட்டது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகா மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டு பொன்னி ரகத்தை கொள்முதல் செய்து வருகிறார்கள்.

இதன் காரணமாக ரூ. 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி அரிசி இப்போது ரூ.85 க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது. இந்த சூழ்நிலையில்  தமிழகத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது.

இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குருவை சாகுபடி நடைபெறாத நிலையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தாலும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியானது இந்த ஆண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது.

எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான காரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version