தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கும் அறிவுசார்ந்த தலைமை அண்ணாமலையிடம் தான் உள்ளதாக தெரிவித்தார். குக்கிராமங்கள் வரை பாஜகவை கொண்டு சென்ற ஆற்றமிக்கத் தலைவர் அண்ணாமலை என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து துறைகளில் துணிச்சலாக போராடக்கூடிய அண்ணாமலை போன்ற தலைவர்களைத் தான் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்ப்பதாகவும், இளைஞர்களின், பெண்களின் ஆதரவு பெற்ற அண்ணாமலைக்கு அணில் போன்று உதவி செய்வதற்காக பாஜகவில் இருந்து விலகி அவருடைய இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
பாஜகவில் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கடந்த 2ம் தேதி டெல்லியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து தனது நிலையை விளக்கினார். இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக உடனடியாக டெல்லி வருமாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டார். இந்தநிலையில், அண்ணாமலையில் ராஜினாமா முடிவை ஏற்பதாக பாஜக தேசியத் தலைமை இன்று (ஜூன் 5) அறிவித்தது. இதையடுத்து, காணொலி வாயிலாக பேசிய அண்ணாமலை, புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
