கரூர் கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்குகளுக்கான பதில் மனு முழுமையாகத் தயாராகவில்லை என்பதால் கால அவகாசம் வேண்டும் என்றும், அனைத்து வழக்குகளையும் சேர்த்து ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கையும் இதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளையும் எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும் என்றும், அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதுதான் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
