கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பரப்புரை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன.
நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிப்பது போன்றே வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசின் முடிவில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர்கள் சார்பில், சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இத்தகைய வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கும் என வாதிடப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் திடீர் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதையடுத்து அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது. தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையில் தலா ரூ.20 லட்சம் வழங்கினார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், இன்று கரூர் சென்றுள்ள நிலையில், உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில நிர்வாகி சீனி அஹமது உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களில், அரசியல் கூட்டங்கள், பேரணிகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசு வேலை வழங்கும் விதிமுறை எதுவும் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழலில் இத்தகைய நடவடிக்கை சாட்சியங்களை பாதிக்கும், சாட்சியாளர்கள் பிறழ்சாட்சியாக மாற வாய்ப்புள்ளது என வாதிடப்பட்டது. எனவே, சிபிஐ விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை வேலை வழங்கக் கூடாது எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரபாகரன் தாக்கல் செய்துள்ள மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க தடை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் தற்காலிகமானதாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தற்காலிக பணி நியமனம் என்பது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சியை தானாக முன்வந்து மனுதாரராக சேர்த்துள்ளது ஐகோர்ட் கிளை. மேலும், வரும் 23 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

