குறைந்த தண்ணீரில் அதிக வருமானம் ஈட்டும் மாற்றுப் பயிர் சாகுபடியாக டிராகன் பழம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் சொட்டுநீர் பாசன முறையில் டிராகன் பழங்களை வெற்றிகரமாக சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெண்டாமேடு முருககவுண்டனூர் அருகே வெங்கடதம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி, செம்மண் நிறைந்த மேட்டுப் பாங்கான நிலத்தில் டிராகன் பழச் சாகுபடியை மேற்கொண்டுள்ளார். தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, சொட்டுநீர் பாசன முறையில் வாரத்திற்கு இரு முறை, 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே தண்ணீர் பாய்ச்சி செடிகளை பராமரித்து வருகிறார்.

களிமண் நிலம் அல்லது அதிக தண்ணீர் கிடைத்தால் செடிகள் அழுகும் அபாயம் இருப்பதால், மிகவும் கவனமாக பராமரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஒருமுறை செடிகளை நட்டு, முறையாக கவாத்து செய்து பராமரித்தால் சுமார் 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும் என்றும், பராமரிப்பு செலவும் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் கூறினார்.

தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அடர் இளஞ்சிவப்பு நிறத்தில் இனிப்புச் சுவையுடன் விளைந்துள்ள டிராகன் பழங்களுக்கு உள்ளூர் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனையாகும் இந்தப் பழங்களை, பொதுமக்களுக்கு நேரடியாக கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்து வருகிறார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 கிலோ டிராகன் பழங்கள் விற்பனையானதாகவும், வரும் நாட்களில் மகசூல் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துள்ளார்.

வெயில் காலத்தில் சிறந்த மகசூலை வழங்கும் டிராகன் பழச் செடிகள், மழைக்காலங்களில் பூக்கள் உதிர்வதும், காய்கள் கருகுவதும் போன்ற பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

சொந்த முதலீட்டுடன், அரசு வழங்கும் மானிய உதவியையும் பயன்படுத்தி இந்தச் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் அவர், தண்ணீர் வசதி குறைவாக உள்ள மேட்டுப் பாங்கான நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளும் டிராகன் பழச் சாகுபடியில் ஈடுபட்டால் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என சக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version