கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானை, கரடி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் வால்பாறை அண்ணாநகர் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. குடியிருப்புப் பகுதியின் பிரதான சாலையில் உலா வந்த அந்தச் சிறுத்தை, வீடுகளுக்கு அருகில் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனத் தேடிப் பார்த்தது.

குடியிருப்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தச் சிறுத்தையின் நடமாட்டம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த அண்ணாநகர் பகுதி வாசிகள், தங்கள் வீட்டிற்கு அருகே சிறுத்தை வந்து சென்றதைக் கண்டு மிகுந்த பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் சூழல் நிலவுகிறது. எனவே, இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version