அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள் என்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, நாடு கடத்தி வருகிறது அந்நாட்டின் டிரம்ப் அரசு. இதை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. உடனே அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மட்டுமின்றி, அதிகளவிலான ராணுவத்தைக் குவித்திருக்கிறது அரசு. அமெரிக்காவின் இந்தக் குடியுரிமைப் பிரச்னையின் பின்னணி என்ன? 

அமெரிக்காவில் வெளிநாட்டினர் 

அமெரிக்காவில் லத்தின் அமெரிக்கர்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்கள், பிரஞ்சுக்காரர்கள், பிரட்டனைச் சேர்ந்தவர்கள், ரஷ்யர்கள், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அரேபியர்கள், கரீபியன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பல நாட்டினர் வசித்து வருகின்றனர். கடந்த 2024-ல் வெளியான அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 15% வெளிநாட்டினர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 2021-க்குப் பிறகு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 45 லட்சம் என்றும். அதில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக 26 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. மேலும், அமெரிக்காவின் சட்டம் ஒழுக்கு பிரச்னைகள் எழுந்து, 2021-23 ஆண்டு காலகட்டத்தில் மொத்தம் 80 ஆயிரம் என்கவுன்ட்டர்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் அறிக்கையும் வெளியாகி அதிரடித்தது. இதற்கெல்லாம் முந்தைய அதிபர் ஜோ பைடன் கொண்டிருந்த குடியேற்றக் கொள்கைதான் முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது. இது அமெரிக்கர்கள் சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் அதிபர் தேர்தல் வந்தது. 

டிரம்புக்கு பயன்பட்ட அதிருப்தி அலை

கடந்த 2024-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியடைந்து அதிபரானார். அவர் சார்ந்த குடியரசுக் கட்சி, அந்தத் தேர்தலில் “மீண்டும் அமெரிக்காவை உன்னதமாக்குவோம்” என்ற கோஷத்தை முன் வைத்துப் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தது. அமெரிக்காவை உன்னதமாக்குவோம் என்றால், அதன் பின்னணியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் பிறநாட்டவர்களை வெளியேற்றுவதுதான் என்று அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. டிரம்ப் ஆரம்பகாலத்திலிருந்தே வெள்ளை அமெரிக்கர்களின் மீதான தமது ஆதரவை வெளிப்படுத்தி வந்தார். அதன் பிரதிபலனாகவே, அதிபராகப் பதவி ஏற்றதும் அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு மற்றும் உன்னதத் தன்மையைப் பாதுகாக்கும் பெயரில் விசா, குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அதன் அடுத்த கட்டமாக அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க சட்ட விதிகள் ஐசிஇ -யைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக தங்கி வந்த லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையையும் துரிதப்படுத்தினார்.

என்ன செய்தது ஐசிஇ? 

ஐசிஇ (Immigration and Customs Enforcement) எனப்படும் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அமெரிக்கா முழுவதிலும் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தின. அதில் முறையான ஆவணங்கள் இல்லாமல், விசா முடிவடைந்தும் வசிப்பவர்களைக் கண்டறிந்து கைது செய்தன. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக பிபிசி தெரிவித்திருக்கிறது. குறிப்பாக டிரம்ப் பதவியேற்ற பிப்ரவரி மாதம் மட்டும் 20,000 பேரை குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 20,000 பேரைக் கைது செய்து வருவதாகவும் நியூ யார்க் டைம்ஸ் இதழ் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஐசிஇ அதிவேகத்துடன் செயல்பட்டு வருவதாகவும், கடந்த ஆட்சிக் காலத்தில் மொத்தமே 1,13,000 வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்தாண்டு அது இருமடங்காகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் 

அமெரிக்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் இருந்த வந்தன. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி கலிபோர்னியா மாகாணம் முழுவதிலும் ஐ சி இ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். பள்ளி, பல்கலைக்கழகங்கள், விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியபோது உரிய ஆவணம் இன்றியும், குற்றப் பின்னணியுடனும் இருந்த 118 வெளிநாட்டவர்களை அப்போது அதிகாரிகள் கைது செய்தனர். உடனே இதை எதிர்த்துத் தொழிலாளர் வர்க்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, டிரம்ப் தேசிய காவல்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 40,000 வீரர்களைக் குவித்தனர். பொதுமக்களுக்கு எதிராக பெரும் படையை டிரம்ப் முன்னிறுத்தியது அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, ஒமாஹா, சியாட்டில், ஆஸ்டின் உள்ளிட்ட பல நகரங்களிலும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்பட்டது. நியூயார்க் மன்ஹட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸில் காவல்துறை வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் இரவு நேரங்களில் கடைகளில் புகுந்து சிலர் கொள்ளையடித்த சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

போராட்டக்காரர்களை விமர்சித்த டிரம்ப் 

இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 11-ம் தேதி வடக்கு கரோலினாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், லாஸ் ஏஞ்சல்ஸில் போராடுபவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தார். ”போராட்டக்காரர்கள் அமெரிக்கக் கொடியை எரித்துவிட்டு, பிற நாட்டுக் கொடியைப் பிடிக்கிறார்கள். அந்த மிருகங்களையும், வெளிநாட்டு எதிரிகளையும் சிறையில் தள்ளுவேன்” என்று பேசினார். இது அமெரிக்கர்கள் மத்தியில் மேலும் கொதிப்பை ஏற்படுத்தியது.

தலையிட்ட அமெரிக்க நீதிமன்றம்

இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய பாதுகாப்புப் படைகளை முறையான ஆலோசனையின்றி குவித்த டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சார்ல்ஸ் ஆர் பிரையர், கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசம் வசமிருந்து பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டை டிரம்ப் எடுத்துக்கொண்டதைக் கடிந்தார். மேலும் ஆளுநர் வசம் பாதுகாப்புப் படைகளை ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், அவரது உத்தரவை நிறுத்தி வைத்து, மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டை டிரம்ப்பே வைத்துக் கொள்ள அதன் தீர்ப்பு அனுமதித்துள்ளது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட அமெரிக்காவின் பல பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version