முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய சங்கம் உண்ணாவிரப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.தென் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு நீராதரமாக விளங்குவதும் முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தொடர்ந்து கேரளா பல்வேறு இடைஞ்சல்களை செய்து வருகிறது.
உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற 22 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு விஷயத்தில் 50 ஆண்டுகளாக தமிழகம் மிகப் பெரிய பின்னடையை சந்தித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது. விவசாய சங்கத்தினர் களத்தில் நின்று போராடி வருகிறோம், ஆனால் கேரள அரசு அது எதையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை, மிகப்பெரிய நெருக்கடியை நோக்கி முல்லைப் பெரியாறு அணை சென்று கொண்டுள்ளது.
மெயின் கமிட்டி வந்தாலும், துணை கமிட்டி வந்தாலும் கேரளாவில் ஒரே கொள்கை புதிய அணை வேண்டுமென்று கூறுகின்றனர். 2006, 2014 இரண்டு முறை தமிழகத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்ற தீர்ப்பினை பெற்றும் அதனை அமல்படுத்த முடியவில்லை. எனவே முல்லைப் பெரியாறு விஷயத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால் 1956 ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரியாக பிரிக்கப்பட்ட போது அப்பட்டமாக தமிழகத்தோடு இருந்திருக்க வேண்டிய தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய தாலுகாகளை கேரளாவுடன் கொண்டு போய் சேர்த்தனர். மீண்டும் அந்த மூன்று தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
மூன்று தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும், அப்படி இல்லை என்று சொன்னால் அதனை தன்னாட்சி கவுன்சில் அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும், இல்லை என்றால் யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 22ஆம் தேதி கம்பத்தில் வாரச்சந்தை அருகே இருந்து காந்தி சிலை வரை விவசாய சங்கங்கள் ஒன்றிணைத்து பேரணியாக வந்து உண்ணாவிரதத்தை நடத்த உள்ளோம்.
எங்களது ஒரே கோரிக்கை முல்லைப் பெரியாறு பிரச்சனையை கேரள அரசு உடனடியாக கைவிட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் அப்படி அமல்படுத்த முன்வராக விட்டால் இந்த மூன்று தாலுகாக்களையும் மத்தியாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் தன்னாட்சி கவுன்சில் அந்தஸ்து கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழகத்துடன் இணைக்க வேண்டும், இந்த மூன்று கோரிக்கை முன்வைத்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.