வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் தம்பதியர் தாக்கல் செய்யும் பெற்றோர் உரிமை மனுக்கள் மீது முடிவு எடுக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு காலக்கெடு விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியரின் பெற்றோர் உரிமை மனுவை, குழந்தை பெறும் பெண்ணின் வயது மற்றும் நடைமுறை குறைபாடுகளை காரணம் காட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஷமீம் அஹமது, அந்த உத்தரவை ரத்து செய்து, மனுவை மீண்டும் பரிசீலித்து 4 வாரங்களில் முடிவு எடுக்க உத்தரவிட்டார்.
மேலும், தேவையற்ற தொழில்நுட்ப காரணங்களால் குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது என்றும், வாடகைத்தாய் விருப்பத்துடன் செயல்படுகிறாரா, குழந்தை மீது பின்னர் உரிமை கோரமாட்டேன் என்ற உறுதிமொழி பெறப்படுகிறதா, வணிக நோக்கம் இல்லையா, குழந்தையை கைவிடமாட்டோம் என்ற உறுதியை தம்பதியர் அளிக்கிறார்களா என்பவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு முழுவதும் பின்பற்ற,. அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
