ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாது அணை  தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், பா.ஜ.க. அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு பாஜக அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக விமர்சித்துள்ள அவர் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி எனவும், ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டுமே தவிர, பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்புவது தமிழகத்தின் நிலையை பலவீனப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே தான் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேகதாது பிரச்சினையில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதே நமது உரிமையை மீட்டெடுப்பதற்கு உரிய வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version