சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கூட்டணி அமைச்சரவையை முதலமைசர் ச.ஜோசப் விஜய் வடிவமைத்திருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் என்னும் முதல் திரைப்படத்திலேயே தனது முத்திரையைப் பதித்து திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவியாளராக பல ஆண்டுகள் பயணித்த மாரி செல்வராஜ், தனது முதல் பட்டத்திலேயே தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அடக்குமுறையை அம்பலப்படுத்தி, அதற்கான தீர்வினையும் விடையாக்கி இருந்தார்.
இதனால் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி பழம்பெரும் இயக்குநர்களும், உச்ச நடிகர்களும் மாரி செல்வராஜை கூர்ந்து கவனித்தபோது, கர்ணன் என்னும் தனது அடுத்த படைப்பினை திரையுலகுக்கு அளித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பாக தென்மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரத்தை இந்தப் படம் உரக்கப் பேசியிருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டில், மாமன்னன் என்னும் திரைப்படத்தினை அளித்த மாரி செல்வராஜ் தாழ்த்தப்பட்ட ஒருவரை சபாநாயகராக மாற்றி, சமூக நீதி பேசும் அரசை முன்னிலைப் படுத்தியிருந்தார். இதன்பிறகு ஓடிடியில் வெளியான வாழையும், அண்மையில் வெளியான பைசன் படமும் மாரி செல்வராஜை தமிழ்த்திரையுலகின் உச்சத்தில் வைத்திருக்கிறது.
சமூக நீதி குறித்து தனது படங்களில் உரக்கப் பேசும் மாரி செல்வராஜ், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் தன் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் புதிய அரசின் மக்கள் பணிகள் சிறக்கட்டும்.என்றும் கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் சபாநாயகராக ஆக்கப்பட்டு, முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் அவருக்கு எழுந்து மரியாதை செய்வதுபோல் காட்சி வைத்திருந்தார் மாரி செல்வராஜ்.
ஆனால் திரைப்படக் காட்சிக்கு முன்பே, இதனைச் சுட்டிக்காட்டி பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த தனபாலை சபாநாயகராக ஆக்கினோம் என அதிமுக தெரிவித்தது. அதன்பிறகு வந்த திமுகவும், தற்போதைய தவெகவும் இந்த விஷயத்தில் சமூக நீதியைப் பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
