மிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்ல உள்ள விஜய், தேசிய அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரான சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய்யின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.

அரசியல் சந்திப்புகளுக்கு அப்பால், இந்த பயணத்தில் தமிழர் பெருமையை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வும் இடம்பெற உள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ( ஜே.என்.யு) வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாடு அரசின் ரூ.65 லட்சம் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, சுமார் 7 அடி உயரமும், 1000 கிலோ எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜே.என்.யு. வளாகத்தில் உள்ள கான்பரன்ஸ் சென்டருக்கு எதிரே சிலை நிறுவப்பட்டுள்ளதால், வடஇந்திய கல்வி வளாகத்தில் தமிழ் பண்பாட்டு அடையாளமாக இது அமையும் என கூறப்படுகிறது.

திருவள்ளுவரின் சிந்தனைகள் உலகளாவிய மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் நல்லாட்சியை வலியுறுத்தும் வகையில் இருப்பதால், அவரது சிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்படுவது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், விஜய்யின் இந்த டெல்லி பயணம், தேசிய அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version