ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில், செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் 540 மெகாவாட் திறன் கொண்ட குவார் நீர்மின் திட்டப் பகுதியில் இன்று திங்கள்கிழமை கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் போது பெயர்ந்த பாறைகள், மண் மற்றும் குப்பைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சென்று கொண்டிருந்த பல வாகனங்களை மூடியது. இதனால் அந்தச் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சாலையிலிருந்த குப்பைகளை அகற்றி போக்குவரத்தைச் சீரமைக்க நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. சிக்கியுள்ள வாகனங்களை மீட்கவும், குப்பைகளை அகற்றவும் பணியாளர்களும் கனரக இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவினால் நீர்மின் திட்டத்தின் கட்டுமான உபகரணங்கள் அல்லது உள்கட்டமைப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில், பிரேம் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கிஷ்துவார்–டோடா நெடுஞ்சாலையும் போக்குவரத்துக்காகத் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தகவலில், ஜம்மு கோட்ட ஆணையர் ரமேஷ் குமாரிடம் தான் பேசியதாகத் தெரிவித்துள்ளார். நீர்மின் திட்ட வளாகத்திற்குள் வெள்ளநீர் புகுந்தாலும், எந்தவித உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். திட்டப் பணிகள் தொடர்பான சில இயந்திரங்கள் எவ்விதப் பாதிப்புமின்றி அகற்றப்பட்டுள்ளதாகவும், கட்டுமானத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கு மற்றும் பிர் பஞ்சால் மலைத்தொடர் பகுதிகளில் இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது. இன்று (ஜூலை 6) முதல் 8-ம் தேதி வரை இப்பகுதிகளில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, செனாப் பள்ளத்தாக்கு மற்றும் பிர் பஞ்சால் மலைத்தொடரின் சில பகுதிகளில் இந்த கனமழையினால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version