உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எ பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இன்று மோதின. அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் 6வது நிமிடத்திலேயே செக் குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது.
செக் குடியரசு அணியின் அலெக்சான்டர் சோஜ்கா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பிடித்தது. ஆட்டத்தின் முதல் பாதி வரை செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. இதற்கு பலனாக 83-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன. ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க தவறின. இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
