பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சுமார் ரூ.25,000 கோடி மதிப்பிலான கங்கை உயர்மட்ட சாலை (Ganga Corridor) மற்றும் வருணா உயர்மட்ட சாலை (Varuna Corridor) ஆகிய இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்தும் இந்த 46 கிலோமீட்டர், 6 வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை-19 (NH-19)-ஐ வாரணாசி வளையச் சாலையுடன் (Ring Road) கங்கை நதிக்கரையை ஒட்டிய உயர்மட்ட சாலை மூலம் இணைக்கும்.

 இந்த திட்டம் நிறைவேறியதும், தற்போது சுமார் 60 நிமிடங்கள் ஆகும் பயண நேரம் 20 நிமிடங்களாக குறையும். சராசரி வாகன வேகம் 100 கி.மீ./மணி வரை உயர வாய்ப்புள்ளது.

 இந்த வழித்தடத்தில் கேபிள்-ஸ்டே பாலம், கங்கை மற்றும் புகழ்பெற்ற காட்களை (Ghats) பார்வையிடும் சிறப்பு பார்வை மையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வு வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

 சுமார் ரூ.11,000 கோடி செலவில் அமையவுள்ள 43.2 கிலோமீட்டர் வருணா உயர்மட்ட சாலை, NH-31-ஐ வாரணாசி வளையச் சாலையுடன் வருணா நதிக்கரையோரமாக இணைக்கும்.

 இதில் மேம்பாலங்கள், இணைப்புச் சாலைகள், ரேம்புகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். மேலும், ஹரஹுவா முதல் நமோ காட் அருகே கங்கைவருணா சங்கமம் வரை 21 கிலோமீட்டர் நீளத்தில் 4 வழி உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது.

 இதன் மூலம் லக்னோ, ஜவுன்பூர், பிரயாக்ராஜ் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் நகரின் நெரிசலான பகுதிக்குள் செல்லாமல் நேரடியாக நமோ காட் சென்றடைய முடியும். அங்கிருந்து படகு மூலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

 தற்போது வாரணாசிக்கு ஆண்டுதோறும் சுமார் 15 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணத்தை எளிதாக்க இந்த திட்டங்கள் முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 இந்த திட்டங்கள் சாலை வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலா, விருந்தோம்பல் துறை, சில்லறை வணிகம், வணிக வளாகங்கள், ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று உள்கட்டமைப்பு துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 மேலும், உத்தரப்பிரதேசத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்த திட்டங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version