மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றம் அமைக்க கோருவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும்.

நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது.

இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும்,  தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.

நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்  தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version