சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமியார் வீட்டில் இரண்டு குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அடுத்த  ஆண்டி கரையைச் சேர்ந்தவர்  கட்டிடத் தொழிலாளி வல்லரசு (வயது 26).  இவரது மனைவி ஸ்ரீபிரியா (22) கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு மைவிழி (4 .5) தர்ஷன் (1.5) ஆகிய  இரண்டு குழந்தைகள் இருந்தனர்.  ஸ்ரீபிரியாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டதால் ஸ்ரீபிரியா மேட்டூர் ராஜகணபதி நகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.

இதனால் மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு, தனது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு வல்லரசு, தனது இரு குழந்தைகளுடன் தனி அறையில் தூங்க சென்றார்.

இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்களின் அறைக் கதவு திறக்கப்படாததால் மனைவி ஸ்ரீபிரியா, மாமியார் வெண்ணிலா ஆகியோர் கதவை பலமாக தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துப் பார்த்தனர்.

அங்கே இரண்டு குழந்தைகளும் துப்பட்டாவில் வீட்டின் இரும்பு சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். கட்டிடத் தொழிலாளி வல்லரசுவும் தனது மனைவியின் சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதனால், வல்லரசு தனது குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூன்று சடலங்களையும் மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாமியார் வீட்டில் மருமகன் குழந்தைகளை கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version