சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் சிறப்புப் பணிகளின் இரண்டாம் நாளான இன்று, அடையாற்றை சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரிப் பராமரிக்கும் சிறப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று (ஜூலை 28) சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அடையாற்றை சீரமைக்கும் பணியை அமைச்சர் என்.ஆனந்த் தொடக்கி வைத்தார்.
அடையாற்றின் நீரோட்டத்தை மேம்படுத்துதல், எதிர்வரும் மழைக்காலங்களில் வெள்ளநீர் எவ்விதத் தடையுமின்றி சீராக வடிந்தோடுவதை உறுதிசெய்தல், ஆற்றின் நீர் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். அனைத்துப் பணிகளையும் தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தினார்.
