கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுத்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறை என்று தமிழக சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த அமைச்சர், வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விரைவில் ஆலோசித்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

மேலும், காவிரி பிரச்சினையில் ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் கள உதவியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறிய அவர், புதிய பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 343 பேர் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையில், தற்போதைய காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

காவிரி நீர் விவகாரத்தின் பின்னணியை குறிப்பிட்ட அமைச்சர், 1974 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சில முடிவுகளால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், காவிரி பிரச்சினைக்கு காரணம் கருணாநிதிதான் எனவும்,  2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்காக 2013 வரை உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version