நீட் தேர்வே தேவையில்லை எனவும், நீட் அச்சத்தால் மாணவர் உயிரிழப்பதற்கு மோடிதான் காரணம் எனவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமாரின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் மதுரை திருநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் அமைச்சர் நிர்மல்குமார், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி  மாணிக்கம் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

பின்னர் செய்தியாளர்களை மூவரும் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தவெகவின் எண்ணம் எனக் கூறினார். ஒரு தேர்வையை ஒழுங்காக நடத்தமுடியாத நிலையில்தான் ஒன்றிய அரசு இருப்பதாகச் சாடிய அவர், நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் உயிரிழப்புக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு  எனக் குற்றம்சாட்டினார். நீட் தேர்வைப் பொறுத்தவரை தென்மாநிலங்களில் முறையாக நடப்பதாகவும் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் தவறுகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

நான் முதல்வர் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எழுந்த கேள்விக்கு, யாரும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என மறுத்தவர், திட்டத்தின் பெயரில் குழப்பம் இருந்ததால் திறன் மேம்பாடு எனப் பெயரை மாற்றியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்னும் கேள்விக்கு, கூட்டணிக் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக அறிவிப்பார்கள் எனக் கூறினார்.

திமுகவும், அதிமுகவும் கூட்டணி போட்டு குறுக்கு வழியில் தவெகவை கவிழ்க்க முயன்றதாகவும், தற்போதும் இருதரப்பு ஆட்களும் அதற்காகப் பேசிவருவதாகவும் கூறிய அமைச்சர், இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி போட்டு தவெகவுடன் மோதத் தயாரா என கேள்வி எழுப்பினார்.

திமுக குடும்பத்தினரும், அதிமுக குடும்பத்தினரும் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க கூட்டணி போடுவதாகவும், அது பிடிக்காமல்தான் அந்தக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்து வருவதாகவும் கூறிய அமைச்சர் நிர்மல்குமார்,

திமுக ஆட்சியில் தொழில்நிறுவனங்கள் தொடங்குபவர்கள் முதலமைச்சரின் மாப்பிள்ளை, மகன் என அதிகார மையங்களைச் சந்தித்ததோடு, பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளானதால் தொழில் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றதாகவும், ஆனால் இனிமேல் அதுபோல் நடக்காது எனவும் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா தான் தவெகவின்  ஒரே பவர் சென்டர் என நயினார் நாகேந்திரன் கூறியது தொடர்பான கேள்விக்கு முதல்வரை தவிர இங்கு வேறு எந்த பவர் சென் டரும் இல்லை  என உறுதியாகக் கூறினார்.

மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை கொண்டுவர தமிழக அரசு முயற்சி செய்துவருவதாகவும் அதே நேரத்தில் மதுரை மாநகரின் முக்கியமான கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதற்காக, ஓரிரு வாரங்களில், ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை இருமுறை பாடியதில் எந்த தவறும் இல்லை, 20 முறை கூடப் பாடலாம் எனவும், வந்தே மாதரத்தை கட்டாயம் பாட வேண்டும் என மோடியும், அமித்ஷாவும்  கூறுவதுதான் தவறானது எனவும் காட்டம் காட்டினார்.

இந்தியா கூட்டணியில் தவெக சேர்க்கப்படுமா என்னும் கேள்விக்கு விடையளித்த விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், எம்.பி தேர்தலில் தவெக வெற்றி பெற்றதும் அதற்கான முறையான அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version