நீட்  தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட போராட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால மத்திய ஆட்சியில் அவர் சந்திக்கும் மிக முக்கியமான மற்றும் முதல் பரவலான மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

கடந்த காலத்தில் பிரதமர் மோடி சந்தித்த குஜராத் நர்மதா பச்சாவ் அந்தோலன் போராட்டம், பட்டிதார் சமூக போராட்டம், சிஏஏ & என்ஆர்சி எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஓராண்டு காலம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் போன்றவை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மாநிலம், சமூகம் அல்லது தொழிற்துறை சார்ந்த குறிப்பிட்ட குழுக்களின்  போராட்டங்களாகவே அமைந்தன. ஆனால், தற்போது ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் அழைப்பைத் தொடர்ந்து டெல்லியில் வெடித்துள்ள இப்போராட்டம், எவ்வித குறிப்பிட்ட எல்லைகளோ அல்லது சமூகக் கட்டுப்பாடுகளோ இன்றி, நாட்டின் அனைத்துத் தரப்பு இளைஞர்களையும் ஒரே புள்ளியில் இணைத்துள்ளது.

டெல்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினரின் (RAF) கடுமையான தடுப்புகளையும் மீறி, ஜந்தர் மந்தரில் நாளுக்கு நாள் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை நாடாளுமன்றப் பேரணியின் போது நடந்த தடியடியில் காயமடைந்து தலை மற்றும் கைகளில் கட்டுப்போட்டுக் கொண்ட இளைஞர்கள் கூட, “உடலில் தான் பலவீனம்; மன உறுதியில் அல்ல” எனக் கூறி மீண்டும் போராட்டக் களத்திற்குத் திரும்பியுள்ளனர்.

இப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் இளம் வல்லுநர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் மட்டுமன்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் பெற்றோர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர். சோனம் வாங்சுக், அபிஜீத் திப்கே போன்ற சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதமும், இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியிலான இளைஞர்களின் விழிப்புணர்வும் இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளன.

அரசின் முட்டுக்கட்டையும் அரசியல் கொந்தளிப்பும்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆப் கட்சியின் அரவிந்த் கெஜரிவால் போன்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் இல்லம் அருகே தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் அதிரடியாகத் தடுத்துக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் ஆளும் பாஜக கூட்டணி தலைவர்கள் தரப்பில், தேர்வு முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்றும் கூறப்பட்டாலும், மத்திய அமைச்சரின் ராஜினாமாவில் எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் உறுதியாக இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அரசியல் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version