2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வெடித்துள்ள மோதலும், பகிரங்கமான வார்த்தைப் போர்களும், தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணியின் அடித்தளத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக திமுக எடுத்துள்ள அதிரடி முடிவும், அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை நேரடியாகக் குறிவைத்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் வெளியான தலையங்கமும் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ராகுலை விளாசிய ‘முரசொலி’

முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள ‘தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்!’ என்ற காரசாரமான தலையங்கம், காங்கிரஸ் கட்சி மீதான திமுகவின் உச்சக்கட்ட கோபத்தைப் பறைசாற்றுகிறது. “தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் கழகத் தோழர்கள் மிகுந்த மனக்காயமுற்றிருக்கிறார்கள்” என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தியின் தன்னிச்சையான மற்றும் ஆணவமான செயல்பாடுகள்தான் இந்த விரிசலுக்குக் காரணம் என்றும், திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதற்கு ராகுல் குழிபறித்தார் என்றும் முரசொலி மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது. தான் பிரதமர் ஆவதை விட, பிரவீன் சக்கரவர்த்தியை எம்பி ஆக்குவதில்தான் ராகுல் ஆர்வம் காட்டினார் என்றும், ராகுல் காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையைச் செய்து வருகிறார் என்றும் அந்த கட்டுரை மிகத் தீவிரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர் 

திமுகவின் இந்த மிகக் கடுமையான தாக்குதலுக்குக் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உடனடியாக எக்ஸ் (X) தளத்தில் மிக ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “2026 தேர்தலில் 131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களாகக் குறைத்தது ஏன் என்பதைப் பற்றி திமுக தலைமை சிந்தித்ததா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மக்கள் ஏன் திமுகவை நிராகரித்தார்கள் என்பதை ஆராய்வதற்குப் பதிலாக, ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தங்களின் தோல்வியை மறைக்கும் முயற்சி மட்டுமே என்று சாடியுள்ளார்.

முற்காலத்தில் கலைஞர் இருந்தபோது தேர்தல் தோல்விகளை அரசியல் முதிர்ச்சியுடன் எதிர்கொண்டார், ஆனால் இன்றைய உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுகவால் இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியாமல் தோழமைக் கட்சிகள் மீது விஷ வார்த்தைகளைக் கக்கி வருகிறது என்று மாணிக்கம் தாகூர் மிக அடியாகத் தாக்கியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் குழப்பங்களின் பின்னணியை உடைக்கும் வகையில் சில முக்கியக் கேள்விகளையும் மாணிக்கம் தாகூர் எழுப்பியுள்ளார். “பாஜகவை எதிர்ப்பதாகப் பேசிக்கொண்டே, பாஜகவுடனும் அதிமுகவுடனும் திமுக நடத்திய மறைமுக அரசியல் பேரங்கள் என்ன? மக்கள் அளித்த தீர்ப்பைத் தடுக்கவும், அரசியல் மாற்றத்தைத் தாமதப்படுத்தவும் நடைபெற்ற ரகசிய முயற்சிகள் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘திராவிட மாடல்’ என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, அது ‘36% கமிஷன் மாடல்’ அரசியல் என்றும், குடும்ப ஆதிக்கம் மற்றும் உதயநிதியின் நிர்வாக முதிர்ச்சியின்மைக்கு எதிராகவுமே மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் விளக்கியுள்ளார். ராகுல் காந்தி பதவிக்காகக் கொள்கையை விற்கும் தலைவர் அல்ல, அவரின் நேர்மையைப் பற்றிப் பேசத் தினமும் நிலைப்பாட்டை மாற்றி உள்ளே பேரம் பேசுபவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் தாகூர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான இந்த இருதரப்பு மோதல் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகள், ஜூன் 8 டெல்லி கூட்டப் புறக்கணிப்புடன் நின்றுவிடப் போவதில்லை, மாறாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக் கணிப்புகளையும் முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறது என்பதையே இந்த முரசொலி கட்டுரையும் மாணிக்கம் தாகூரின் பதிலும் தெளிவாக உணர்த்துகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version