பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தனது கருத்து தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கொள்கை முடிவை எடுப்பார் என்றார். மேலும், கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட கொள்கைளை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தனது இந்தக் கருத்துக்கள் ஊடகங்களில் தவறாகத் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு அவர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தனது கருத்தின் உண்மையான நோக்கம் திசைதிருப்பப்பட்டுள்ளதாகவும், நாகரிகமான அரசியலை வலியுறுத்திய எனது வார்த்தைகள், தவறான கண்ணோட்டத்துடன் சித்தரிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், தனது கருத்து அமைந்ததாக கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அநாகரிகமான விமர்சனங்களை முன்வைத்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
