தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழக பணிக்குத் திரும்புகிறார். இதையடுத்து, அடுத்த தமிழக தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில் அவரது பெயர் முக்கியமாக பேசப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் எம். சாய்குமார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் சாய்குமார் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருந்த சாய்குமாரின் பதவிக்காலத்தை மத்திய அரசு ஆறு மாதங்கள் நீட்டித்துள்ளது. இதன்படி, அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை பதவியில் நீடிக்க உள்ளார். இதற்கிடையில், அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
1992-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தருமபுரி உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கினார். பின்னர் கன்னியாகுமரி, தேனி மாவட்ட ஆட்சியராகவும், மாநகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட் செயலாளர், சுற்றுலாத்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
2016 முதல் 2018 வரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், மின்வாரியத் தலைவர், வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, தனிப்பட்ட காரணங்களால் மாநிலப் பணிக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது. அவரது பணிக்காலம் 2029 மே 31 வரை உள்ளது.
தமிழகத்துக்குத் திரும்பும் நிலையில், அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கான முக்கிய வேட்பாளர்களில் ராஜேஷ் லக்கானியின் பெயர் இடம்பெறுகிறது.
