நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கையை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இந்த ஆண்டு ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி  உள்ளிட்ட மாணவர், இளைஞர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகே, கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போராட முயன்றபோது, அதை காவல்துறையின் மூலம் அடக்க முயன்றதாகக் கூறி  தவெக அரசையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும், நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் பெருமளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version