நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிராக எந்தவித விவாதமுமின்றி வந்தே மாதரம் பாடலுக்கு அதிகாரமளிக்கும் வகையில், “தேசிய மரியாதைக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்கும் (திருத்த) மசோதா-2026 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய செயலாளருமான நவாஸ்கனி தனது எக்ஸ்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் இத்தகைய சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது எனக் கூறியுள்ள நவாஸ்கனி,
அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்த மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்டவைகளுக்கு எதிரான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும், கலந்துரையாடலும் இன்றி நிறைவேற்றியது சர்வாதிகாரத்தின் உச்சம் எனச் சாடியுள்ளார்.
பாஜக அரசின் பாசிச சிந்தனையும், சர்வாதிகார சிந்தனையும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேராபத்து என்று எச்சரித்துள்ள நவாஸ்கனி எம்.பி, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நாட்டைக் காக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் என வலியுறுத்தியுள்ளார்.
