தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான மறுதேர்வு வருகிற ஜூன் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதனையொட்டி, நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையங்களை தயார் செய்யும் முன்னேற்பாடு பணிகளும், முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கூடிய தீவிரக் கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வினாத்தாள்களை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வருவது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை மாநகரப் பகுதியான கே.டி.சி. நகர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஐகிரவுண்டு பழைய ஆஸ்பத்திரி மற்றும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக வட்டமடித்தது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பத்திரமாகத் தரை இறங்கியது.

மதுரையில் இரு வந்து இறங்கிய அந்த ஹெலிகாப்டரில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (CISF) பலத்த பாதுகாப்போடு 20 வினாத்தாள் பண்டல்கள் கொண்டு வரப்பட்டன. பின்னர் ஹெலிகாப்டரிலிருந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாகக் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டன. அதன் பிறகு, மேலும் 20 வினாத்தாள் பண்டல்களைக் கொண்டு வருவதற்காக அந்த ஹெலிகாப்டர் மீண்டும் மதுரையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இவ்வாறு மொத்தம் இரண்டு முறை ஹெலிகாப்டர் மூலமாக வினாத்தாள் பண்டல்கள் நெல்லைக்குக் கொண்டு வரப்பட்டன.

ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த வினாத்தாள் பண்டல்கள் அனைத்தும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு பாளையங்கோட்டையில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஒரு தனி அறையில் வினாத்தாள்கள் பத்திரமாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கனரா வங்கி குடோனிலும் வினாத்தாள்களை வைப்பதற்கான பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version