தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வு சுமூகமாக நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டுமென, தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார் .
நாடு முழுவதும் நீட் போட்டி தேர்வு நாளை பிற்பகல் நடைபெறுகிறது. தமிழகத்தில், 31 மாவட்டங்களில், 307 மையங்களில் நடைபெறும் தேர்வில், 1,42,489 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்வுக்கான மாதிரி பயிற்சி மற்றும் ஆய்வு, இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.
crpf வீரர்கள், தேர்வு மையங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா, மெட்டல் டிடெக்டர் கருவிகள் நிறுவப்பட்டு இருக்கிறதா, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறதா என பல்வேறு அம்சங்களை என் டி ஏ அதிகாரிகள், மாநில அதிகாரிகள், போலீசார் ஆய்வில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று காணொளி காட்சி மூலமாக, தலைமைச் செயலாளர் சாய்குமார், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நீட் தேர்வை எந்தவித பிரச்சனையும் இல்லாமல், சுமூகமாக, உரிய பாதுகாப்புடன் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தேசிய தேர்வு முகமை சார்பில், தமிழகத்திற்கான மாநில அளவிலான கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று சென்னை வந்த நிலையில் பல்வேறு தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
