ரசை விமர்சிப்பவர்களை எந்தச் சூழலிலும் கைது செய்யக் கூடாது என்று கூறினால், எந்த அரசாலும் ஆட்சியை நடத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருநாவுக்கரசர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பின் மற்றொரு கூட்டணி அமைவது புதிதல்ல என்றும், கடந்த 60 ஆண்டுகளாக இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் பிற கட்சிகளை உடைத்து ஆட்சி அமைக்கும் சம்பவங்களும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

தேர்தல் கூட்டணிகள் மாறியவுடன் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் தராது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் மனநிலையின் வெளிப்பாடாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலாக திமுக ஆட்சியைப் பற்றி தனியாக சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசுகள் ஜனநாயக முறையிலேயே எதிர்கொள்ள வேண்டும் என்றார். அதேபோல், அரசியல் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியிலான பதில்தான் வழங்கப்பட வேண்டும் என்றும், விமர்சனங்களும் உண்மையானதாகவும் பொறுப்பானதாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேநேரத்தில், “அரசை விமர்சனம் செய்பவர்களை யாரையும் கைது செய்யக் கூடாது என்று கூறினால், யாராலும் ஆட்சியை நடத்த முடியாது. சட்டம்-ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியைப் பொறுத்தே மதிப்பிடப்பட வேண்டும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரேனும் சென்றால் அதைத் தடுக்க முடியாது என்றும், தமிழகத்தில் சில துறைகளில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version